கொழும்பு பிரதேச செயலகத்தினுள் நீர் வழங்கல் தொடர்பாக மூன்று பிரதான பிரச்சனைகள் காணப்படுகின்றன.
- தாழ் அமுக்க பிரதேசங்களில் நீர் வழங்கல்.
- சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகம்.
- பொது நீர் குழாய்களிலிருந்து நீர் வீண் விரயம்.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை ஓரளவேனும் குறைப்பதற்காக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- தனிப்பட்ட குழாய்நீர் விநியோகம் வழங்கப்பட்டன.
- சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகத் தடை.
- குறைந்த காற்றழுத்த பரப்புகளுக்கு அதிக விட்டம் கொண்ட தண்ணீர் குழாய்கள் வழங்குதல்.
புளுமென்டல் குப்பைமேடும் அதன் பாதகமான விளைவும்
மாதம்பிட்டிய‚ மட்டக்குளிய‚ கொட்டாஞ்சேனை‚ புளுமென்டல் ஆகிய 4 பிரதேசங்களை இணைத்த ஏறத்தாழ அரை ஏக்கர் பரப்பளவை புளுமென்டல் குப்பைமேடு வியாபித்துள்ளது. ஏறத்தாழ 5000 குடும்பங்கள் இந்தக் குப்பைமேட்டிற்கு அண்மையில் வாழ்ந்து வருகின்றன. இந்த குப்பை கூழங்களால் நீர் வடிகால் அமைப்புக்களில் அடைப்புக்கள் ஏற்பட்டு நீரோட்டம் தடைப்படுகின்றன. இத்தகைய தன்மை மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பாக அமைகின்றது. இத்தகைய தன்மைகளால் நுளம்புகளின் பெருக்கம்‚ சுகாதாரமற்ற சுற்றாடல்‚ வளிமாசடைதல்‚ துர்நாற்றம் வீசுதல்‚ போன்ற தன்மைகளோடு விசேடமாக தொற்றுநோய்கள் வெகுவாகப் பரவுவதற்கு ஏதுவாக அமைகின்றது. இத்தகைய தன்மை கொழும்பு நகரத்தின் சுத்தம்‚ சூழல்‚ சுகாதாரத்தை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக கொழும்பு மாநகரசபையானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவற்றை வெற்றி காண்பதென்பது முயற்கொம்பாகவே உள்ளது. ஆகவே இக் குப்பை மேடானது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வதனால் மேற்குறித்த பிரச்சனைகளை ஓரளவேனும் குறைத்துக்கொள்ள முடியும். பசளையாக்குதல் என்பது இதற்கு இன்னுமோர் தீர்வாக அமைகின்றது. ஆனாலும் இது பெரியளவில் வெற்றிதரும் திட்டம் என்று கூறுவதற்கில்லை.
அண்மைக் காலங்களில் இந்தப் பெரும் பிரச்சனையை சூழல் சுற்றாடல் அமைச்சு பொறுப்பேற்றுள்ளதால் எதிர்காலத்தில் இப் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்குமுண்டு.